தமிழ்நாடு செய்திகள்

கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக குழந்தையை கடத்தினேன்- கைதான பெண் வாக்குமூலம்

Published On 2023-04-27 16:58 IST   |   Update On 2023-04-27 16:58:00 IST
  • குழந்தையை திருடி சென்ற உமாவை கைது செய்து விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்து வந்தனா்.
  • உமா உதவி செய்வது போல் நடித்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர்:

ஒடிசாவை சோ்ந்தவா் அா்ஜுன்குமாா் (வயது 26). இவரது மனைவி கமலினி (24). இந்த தம்பதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே.அய்யம்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளா்களாக வேலை செய்து வந்தனா். நிறைமாதக் கா்ப்பிணியாக இருந்த கமலினிக்கு கடந்த 22 ந்தேதி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னா் கமலினியும், அவரது குழந்தையும் பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

அப்போது அருகில் கருச்சிதைவுக்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு உதவியாக வந்த உமா (24) என்பவா் கமலினியின் குழந்தையை கடத்திச்சென்றார். இதுகுறித்து திருப்பூா் தெற்கு போலீசில் அர்ஜூன்குமார் புகார் தெரிவித்துள்ளாா். இதையடுத்து உமா செல்போன் எண்ணைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினா்.

அப்போது கள்ளக்குறிச்சியில் உமா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உமாவிடம் இருந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை சோ்த்தனா். மேலும் குழந்தையை திருடி சென்ற உமாவை கைது செய்து விசாரணைக்காக திருப்பூருக்கு அழைத்து வந்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை கடத்தியதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

கைது செய்யப்பட்ட உமா திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் 2 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். இதில் உமா 2 முறை கர்ப்பமடைந்தார். ஆனால் அவர் கருக்கலைப்பு செய்தார்.

இந்தநிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு 2பேரும் திருமணம் செய்தனர். அதன்பிறகு உமா கர்ப்பம் அடையவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 6மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

குழந்தை இருந்தால் 2பேரும் சேர்ந்து விடலாம் என உமா எண்ணினார். இதற்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்த திட்டமிட்டார். அதன்படி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற உமா, எஸ்தர் என்ற பெண்ணுக்கு உதவுவதாக கமலினியிடமும், எஸ்தரிடம் கமலினிக்கு உதவி செய்வதாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை 2பேரும் நம்பி உள்ளனர்.

இந்நிலையில் கமலினிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து அந்த குழந்தையை கடத்தி செல்ல திட்டமிட்டு 2,3 நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார். 24-ந்தேதி குழந்தையை இன்குபேட்டரில் வைப்பதற்காக கூறி குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். பின்னர் தனது கணவனிடம் குழந்தை பிறந்திருப்பதாகவும், கள்ளக்குறிச்சியில் உள்ள தனது தோழி ராணி வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் உமாவின் கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்ட போது உமா குழந்தையை கடத்தி கள்ளக்குறிச்சியில் இருப்பதை அறிந்து அங்கு போலீசார் சென்றனர். அப்போது உமா, போலீசாரிடம் இது எனது குழந்தை என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் போலீசார் குழந்தையை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து உமாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஒரு குழந்தையை பெண் கடத்தி சென்றார். குழந்தை இல்லாத அந்த பெண் பிரசவித்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து இந்த செயலில் ஈடுபட்டார். அது போல் உமாவும் உதவி செய்வது போல் நடித்து குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 2குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை தடுக்க ஆஸ்பத்திரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News