தமிழ்நாடு

மத்திய குழு இன்று மாலை சென்னை வருகை: மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2 நாட்கள் ஆய்வு

Published On 2023-12-11 01:31 GMT   |   Update On 2023-12-11 01:31 GMT
  • நாளை முதல் இரண்டு நாட்கள் நான்கு மாவட்டங்களில் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு.
  • வியாழக்கிழமை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின், அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் காரணமாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த 3 மற்றும் 4-ந்தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன. வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந்தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்ட அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்கட்ட நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார். மத்திய அரசும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடியை வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில், புயல் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது.

இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற்றிருக்கின்றனர்.

மத்திய குழுவினர் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆய்வு பணிகள் முடிந்ததும் வரும் 14-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

அதன் பின்னர் டெல்லி புறப்பட்டு செல்லும் மத்திய குழுவினர், சேத மதிப்பு இறுதி அறிக்கையை ஒரு வார காலத்துக்குள் தயார் செய்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Tags:    

Similar News