தமிழ்நாடு செய்திகள்

தொழில்வரி உயர்வு: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2024-08-02 10:12 IST   |   Update On 2024-08-02 10:12:00 IST
  • அனைத்துக் கட்டண உயர்வுகளும் ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் செயலாகும்.
  • விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளும் கட்டணமும் 50 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொழில் உரிமக் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மாநகராட்சியிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்காக பதிவுக் கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் மாநகராட்சியால் வசூலிக்கப்படுகிறது. தற்போது வரை வணிகத்திற்காக வசூலிக்கப்பட்டு வந்த தொழில் உரிமக் கட்டணம் 500 ரூபாயிலிருந்து மிகச் சிறிய வணிகத்திற்கு ரூ.3,500 ஆகவும், பெரிய வணிகங்களுக்கு 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இது வணிகர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.

இதேபோன்று விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளும் கட்டணமும் 50 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் விளையாட்டு அரங்கங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதன் காரணமாக சென்னை மாநகராட்சி விளையாட்டு அரங்கங்களில் பொதுமக்கள், குறிப்பாக ஏழையெளிய மற்றும் நடுத்தர வகுப்பினைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சியினை மேற்கொள்வார்கள். இதுபோன்ற செயல் விளையாட்டின் மீது இளைஞர்களுக்கு உள்ள ஆர்வத்தினை குறைக்கும் செயலாகும். மொத்தத்தில் அனைத்துக் கட்டண உயர்வுகளும் ஏழை-எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் செயலாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News