தமிழ்நாடு செய்திகள்

புதுக்கோட்டை அருகே கார் மீது பஸ் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2023-09-29 13:37 IST   |   Update On 2023-09-29 13:37:00 IST
  • புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி 5 பேருடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
  • கார் மீது பஸ் சாய்ந்து கிடந்ததால் பயணிகள் சில பேர் காயங்களுடன் கதறினர்.

புதுக்கோட்டை:

மதுரையில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி 5 பேருடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரை சந்தோஷ் என்பவர் ஓட்டிவந்தார்.

புதுக்கோட்டை அருகே திருமயம் சாலை செபஸ்தியார் புரத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த தனியார் பேருந்து கார் மீது மோதி ஏறியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் டிரைவர் சந்தோஷ் உள்பட 2 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

கார் மீது பஸ் சாய்ந்து கிடந்ததால் பயணிகள் சிலபேர் காயங்களுடன் கதறினர். அவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கார் மீது ஏறிய பஸ்சை தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News