தமிழ்நாடு

டாக்டர்.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் இடியும் நிலையில் கட்டிடங்கள்- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்

Published On 2023-09-04 05:53 GMT   |   Update On 2023-09-04 05:53 GMT
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
  • சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

ராணிப்பேட்டை:

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.

அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.

இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .

இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.

இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.

கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.

ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.

நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

Similar News