தமிழ்நாடு

கடனை திருப்பி தராததால் பெண்ணை காரில் கடத்திய நபர்கள்- சினிமா பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம்

Published On 2023-02-05 17:01 GMT   |   Update On 2023-02-05 17:01 GMT
  • முன்பணம் வாங்கிக்கொண்டு வேலை செய்த பெண், உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லையாம்.
  • உடனே வேலைக்கு வராவிட்டால் வாங்கிய முன்பணத்தை தரவேண்டும் என்று உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே, கடனை திருப்பி தராததால், லட்சுமி என்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த நபர்கள் கடத்தி சென்றதாக லட்சுமியின் மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

ரமணன்கொட்டாயைச் சேர்ந்த லட்சுமி (வயது 50), கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். முன்பணம் வாங்கிக்கொண்டு அங்கேயே தங்கி வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு ரூ.2.80 லட்சம் பணம் வாங்கி வேலை செய்து வந்த இவர், பொங்கல் அன்று ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல்நிலை சரியில்லாததால் அவர் பணிக்கு திரும்பவில்லையாம்.

இந்நிலையில், செங்கல் சூளை நடத்தி வரும் நபர்கள் இன்று லட்சுமியின் வீட்டுக்கு வந்து அவரை உடனடியாக வேலைக்கு வரவேண்டும், இல்லாவிட்டால் வாங்கிய முன்பணத்தை தரவேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால் உடனடியாக வர இயலாது, உடல்நிலை சரியானபின்னர் வருவதாக லட்சுமி கூறி உள்ளார். ஆனாலும், அதை கேட்காத சூளை நிர்வாகிகள், லட்சுமியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்றனர். சினிமாவில் வரும் காட்சி போன்று பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

இது தொடர்பாக அவரது மகன் அளித்த புகாரில் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட பெண்ணை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News