தமிழ்நாடு

வாக்களிக்க "பூத் சிலிப்" கட்டாயமில்லை: மாவட்ட தேர்தல் அதிகாரி

Published On 2024-04-18 06:54 GMT   |   Update On 2024-04-18 06:54 GMT
  • வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும்.
  • பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் தங்களுக்கு இன்னும் பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று குறை கூறி வருகின்றனர்.

இதுபற்றி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு ஆவணங்களை அறிவித்துள்ளது. அவற்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநர் உரிமம், வருமான வரி பான்கார்டு, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை போன்ற ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை வைத்து வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும்.

எனவே பூத் சிலிப் கிடைக்கவில்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் இல்லை.

சென்னை மாநகரில் 87 சதவீதம் வீடுகளுக்கு பூத் சிலிப் வினியோகித்து விட்டோம். சில வீடுகளில் கதவை திறப்பதில்லை. அதுபோன்ற காரணங்களால்தான் பூட்டிக்கிடக்கும் வீடுகளுக்கு கொடுக்க முடியவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பூத் சிலிப் கொடுக்கும்போது சில வீடுகள் பூட்டி கிடப்பதாக கூறுகின்றனர். வீட்டை பூட்டி விட்டு சிலர் வேலைக்கு சென்று விடுகிறார்கள்.

இதுபோன்ற காரணங்களால்தான் பூத் சிலிப் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1950 என்ற எண்ணில் விவரங்களை பதிவு செய்தால் எந்த வாக்குச்சாவடியில் உங்கள் பெயர் உள்ளது, பாகம் எண் முதற்கொண்டு அனைத்தும் கிடைத்து விடும். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை உள்ளீடு செய்தாலும் அனைத்து விவரங்களும் வந்து விடுகிறது.

எனவே பூத் சிலிப் என்பது கூடுதல் உதவிதான் அது கட்டாயமில்லை. வாக்களிக்க செல்லும்போது வாக்குச்சாவடி வாசல் அருகே உதவி மையம் இருக்கும். அங்கிருக்கும் தன்னார்வலர்கள் உங்களுக்கு வழி காட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News