தமிழ்நாடு

பழவேற்காடு ஏரியில் கழிவுநீர் கலந்ததால் பறவைகள் இறந்தன- பரிசோதனையில் தகவல்

Published On 2024-02-25 10:14 GMT   |   Update On 2024-02-25 10:14 GMT
  • சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

சென்னை:

சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல் பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன.

இதையடுத்து பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவைகளை சேகரித்தனர். பின்னர் இறந்த பறவைகளை கால்நடை மருத்துவ குழுவினர் நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோ தனைக்கு அனுப்பினர்.

இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.

Tags:    

Similar News