தமிழ்நாடு செய்திகள்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு படையெடுக்கும் பறவைகள்

Published On 2022-10-12 16:28 IST   |   Update On 2022-10-12 16:28:00 IST
  • அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 6 மாதங்கள் இந்த சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரும் காலமாகும்.
  • வாத்துகள் மற்றும் சில ராப்டர் வகை பறவைகள் வந்துள்ளன.

வேளச்சேரி:

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை 1,730 ஏக்கரில் பரவி உள்ளது. இங்கு அரிய வகை உள்ளூர் பறவைகளும், பல்வேறு நீர்வாழ் உயிரினங்களும், தாவர இனங்களும் காணப்படுகின்றன.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு ஆண்டுதோறும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வகையான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன.

வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் வெளிநாடுகளில் பறவைகள் வரத்தொடங்கும். தற்போது மத்திய ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இதனால் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் தாண்டி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்துள்ளன. சதுப்பு நில பகுதிகளில் வண்ண வண்ண கலர்களில் பறவைகள் மனதை கவருகிறது.

இந்த மாத இறுதியில் சதுப்புநிலத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சதுப்பு நிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளில் சாதா உள்ளான், பேதை உள்ளான், ஐரோப்பா, ரஷியா நாடுகளில் உள்ள மஞ்சள் வாலாட்டி, நீலச்சிறகு வாத்து, தட்டைவாயன், பூனைப்பருந்து, ஜப்பான், சீனா நாடுகளில் காணப் படும் தலைஆள்காட்டி உள்ளிட்ட பறவைகள் முக்கியமானவை ஆகும்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறும் போது, 'ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அக்டோபர் மற்றும் தொடர்ச்சியான மாதங்களில் பனிக்காலம் என்பதால் அங்குள்ள பறவைகள் உணவுக்காக ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் பள்ளிக்கரணைக்கு வரும்.

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 6 மாதங்கள் இந்த சதுப்பு நிலத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரும் காலமாகும். தற்போது மழை காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் போதிய அளவு தண்ணீர் உள்ளது.

ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் இருந்தே பறவைகள் வரத்தொடங்கி விட்டன. வாத்துகள் மற்றும் சில ராப்டர் வகை பறவைகள் வந்துள்ளன. இனிவரும் நாட்களில் வெளிநாட்டு பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். பொதுமக்கள் இதனை ரசித்து பார்க்கலாம்' என்றார்.

Similar News