தமிழ்நாடு

மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: மேலாளர் கைது

Published On 2024-03-29 04:45 GMT   |   Update On 2024-03-29 05:51 GMT
  • பலியானவர்கள் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டது.
  • விடுதி உரிமையாளர் அசோக்குமார் தலைமறைவானார்.

சென்னை:

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த விடுதி நேற்று வழக்கம் போல் உற்சாகமாக செயல்பட்டு கொண்டிருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் உற்சாக மிகுதியில் இருந்தனர்.

இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால் கேளிக்கை விடுதிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்து வெளியேற முயன்றுள்ளனர். எனினும் கட்டிட இடிபாடுகளில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் சிக்கி கொண்டதாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அவர்களது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியானவர்கள் மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (வயது 22), திருநங்கை லல்லி (22), சைக்கோள் ராஜ் (48) என்பது அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில் மதுபான கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விடுதி மேலாளர் சதீஷை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். விடுதி உரிமையாளர் அசோக்குமார் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News