தமிழ்நாடு

4 சிறுவர்கள் தப்பி ஓடியதால் தனியார் காப்பகத்தில் இருந்த 20 பேர் வேறு காப்பகங்களுக்கு இடமாற்றம்

Published On 2023-11-30 06:22 GMT   |   Update On 2023-11-30 06:22 GMT
  • ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
  • குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

திருச்சி:

திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News