தமிழ்நாடு

சிறைக்காவலர் தீக்குளித்து தற்கொலை: பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2023-04-29 05:36 GMT   |   Update On 2023-04-29 05:36 GMT
  • போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
  • தீக்குளித்த சிறை காவலர் ராஜா இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி:

திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் லால்குடி கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது தம்பி நிர்மல் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 25-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து லால்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொற்செழியன் விசாரணை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் ராஜா, நிர்மலுக்கு இடையே நேற்று மதியம் பிரச்சனை மூண்டது. அதைத் தொடர்ந்து ராஜா லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். அப்போது போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த ராஜா காவல் நிலையம் முன்பு தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு இன்று காலை சிறை காவலர் ராஜா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

தீக்குளித்த சிறை காவலர் ராஜா இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே வழக்கை முறையாக விசாரிக்காமல் விட்டதாக பணியில் இருந்த லால்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொற்செழியனை, திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் இன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News