தமிழ்நாடு

குற்றங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான 8 போட்டிகள்

Published On 2022-11-26 10:16 GMT   |   Update On 2022-11-26 10:16 GMT
  • அடையாளங்கள் காண்பது, தொழில் நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில் சைபர் ஹேக்கத்தான் என்ற போட்டி நடத்தப்படுகிறது.
  • சைபர் கிரைம் நிபுணர்களால் 2ம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்வுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சென்னை:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை காவல்துறையின், சைபர் கிரைம் பிரிவினர் சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகள் கொண்டு விவரங்கள் சேகரிப்பது, அடையாளங்கள் காண்பது உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில் சைபர் ஹேக்கத்தான் என்ற போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் கலந்துகொள்ள பொதுமக்களை அழைப்பதுடன், விருப்பமுள்ளவர்கள் தனி நபராகவோ, குழுவாகவோ இப்போட்டியில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து நவம்பர் 30-ந்தேதிக்குள், சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு இணைய முகவரியான dcpcccgcp@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தங்களது விவரங்கள், அடையாள சான்றுகளுடன் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

இப்போட்டி 2 கட்டமாக நடைபெற திட்டமிடப்பட்டு, டிசம்பர் 6-ந்தேதி வரை இணையதளம் வழியாக முதற்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, சைபர் கிரைம் நிபுணர்களால் 2ம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்வுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பின்னர் தேர்ந்தெடுக்கப் பட்ட வெற்றியாளர்கள், டிசம்பர் 12-ந்தேதி சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைக்கப்பட்டு, நேரடியாக தேர்வு நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் அல்லது குழுவினருக்கு முதல் பரிசு ரூ.50,000, 2-ம் பரிசு ரூ.30,000 மற்றும் 3-ம் பரிசு ரூ.20,000 வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.

மேலும், பொதுமக்கள் இப்போட்டி குறித்த விவரங்களை அறிய சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு தொலைபேசி எண் 044-23452348ஐ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News