சென்னையில் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவது 60 சதவீதம் குறைந்தது- போக்குவரத்து போலீசார் தகவல்
- கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.
- ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இது போன்று பல்வேறு விதிமீறல்களுக்கும் நூற்றுக்கணக்கில் இருந்த அபராத தொகை ஆயிரங்களை தாண்டி உள்ளது. சென்னையிலும் புதிய அபராத வசூலில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய அபராத தொகை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ஆனால் புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் வழக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளன. 97 ஆயிரம் வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசார் விதிமீறலில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக அபராத தொகையை வசூலிப்பதால் போக்குவரத்து விதிமீறல்கள் வெகுவாக குறைந்துள்ளன.
அந்த வகையில் 60 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் பழைய அபராத முறை அமலில் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எவ்வளவு? புதிய அபராத முறை அமலான பின்னர் பதிவாகி இருக்கும் வழக்குகள் எவ்வளவு? என்பது பற்றிய விவரம் வருமாறு:-
பழைய அபராத தொகை வசூலிக்கப்பட்டபோது ஒரு மாதத்தில் 94723 ஹெல்மெட் வழக்குகள் போடப்பட்டு உள்ளன. புதிய முறை அமலான பின்னர் இந்த வழக்கின் எண்ணிக்கை 41,790 ஆக குறைந்துள்ளது.
அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் பழைய அபராத தொகையின்போது மாதத்துக்கு சராசரியாக 2461 என்கிற அளவில் இருந்துள்ளது. இது தற்போது 713 ஆக குறைந்துள்ளது.
சிக்னலை மீறி செல்பவர்கள் மீது போடப்பட்ட வழக்கு முன்னர் 7580 ஆகவும், தற்போது 2356 ஆகவும் உள்ளது. புதிய அபராத தொகை அமலான பின்னர் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இந்த விதிமீறல் வழக்கின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.
இதற்கு முன்னர் மாதத்துக்கு 11,788 வழக்குகள் போடப்பட்ட நிலையில் தற்போது சுமார் 4 ஆயிரம் வழக்குகளே பதிவாகி வருகின்றன.
ஓட்டுனர் உரிம வழக்குகளை பொறுத்தவரையில் இதற்கு முன்னர் மாதம் 3500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தற்போது அது 589 ஆக சரிந்துள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புதிய அபராத முறை அமலுக்கு வந்த பிறகு போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத தொகை 5 முதல் 10 மடங்கு கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள். இதன் காரணமாகவும், போக்குவரத்து போலீசாரின் தொடர் விழிப்புணர்வு காரணமாகவும் போக்குவரத்து விதிமீறல்கள் சென்னையில் குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.