தமிழ்நாடு செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

சமாதானம் பேசியவரை தள்ளிவிட்டதில் பரிதாப பலி: பெண் உள்பட 6 பேர் கைது

Published On 2023-11-18 11:45 IST   |   Update On 2023-11-18 11:45:00 IST
  • பலத்த காயத்துடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர்.
  • கோழி மேய்ந்த தகராறு கொலை முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூத்தனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(50). இவரது வீட்டிற்கு பின்னால் குமார்(50) என்பவர் வசித்து வந்தார். முருகன் வளர்த்து வந்த கோழி குமார் வீட்டிற்கு சென்றதால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சம்பவத்தன்று முருகன் வீட்டு கோழியை குமார் பிடித்து வைத்து கொண்டுள்ளார். அப்போது குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். இதுகுறித்து முருகன் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார்.

தங்கள் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த குமார் குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்தனர். மேலும் முருகனையும் கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முருகனின் மைத்துனர் வேல்சாமி (45) என்பவர் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவரை குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழே தள்ளிவிட்டனர்.

பலத்த காயத்துடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து குமார், அவரது மகன் ரெங்கேஸ்வரன், மருமகன் குணசீலன்(34), தங்கபாண்டி(26), பிச்சைமணி(40), முத்தீஸ்வரி(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கோழி மேய்ந்த தகராறு கொலை முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News