ஆலங்குளம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் கையை வெட்டிய 4 பேர் கைது
- ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
- நேற்று இரவு அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த கீழக்கலங்கல் இந்திரா காலனியை சேர்ந்தவர் நடராஜன் மகன் கனகராஜ் (வயது 25). கூலித் தொழிலாளி.
இவருக்கும், உறவினர் மகளான குருக்கள்பட்டி அருகே உள்ள கருத்தானூரை சேர்ந்த மங்கள்ராஜ் மகள் கவிக்குயில் (22) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் ஊருக்கு வெளிப்புறம் உள்ள தோட்டத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கனகராஜின் மனைவி கவிக்குயில் திருமணத்திற்கு முன்னர் பக்கத்து ஊரான மலையான்குளத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் வெங்கடேஷ்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர் திருமணத்திற்கு பிறகு வெங்கடேசுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேஷ், கவிக்குயில் உல்லாசமாக இருந்துள்ளனர்.இதனை பார்த்த கனகராஜின் தந்தை நடராஜன்தனது மகனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.தொடர்ந்து கவிக்குயிலின் அம்மா முத்துமாரி(50), அண்ணன் அன்பரசு(25) ஆகியோரையும் வரவழைத்து வெங்கடேஷை மரத்தில் கட்டில் வைத்து கட்டையால் தாக்கி அரிவாளால் வெங்கடேஷ் இடதுகை மணிக்கட்டை வெட்டினர்.
இதனை கண்ட கவிக்குயில் அருகில் இருந்த கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்தார். குறைவான தண்ணீர் இருந்ததால் அவர் உயிர் தப்பினார். உடனே முத்துமாரி, அன்பரசு, கனகராஜ், நடராஜன் ஆகிய 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.
சம்பவம் குறித்து ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி கனகராஜ், அன்பரசு, நடராஜன் மற்றும் முத்துமாரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.