தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு

Published On 2024-05-24 03:26 GMT   |   Update On 2024-05-24 03:26 GMT
  • தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி 24 பீர் பிராண்டுகள் விற்பனை நடைபெற்றது.
  • வெளிநாட்டு வகை மதுபான விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் என்றாலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் முதல் தேர்வாக 'பீர்' தான் இருக்கும். அந்த வகையில், தற்போது கோடை காலத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. டாஸ்மாக் நிர்வாகமும் பல்வேறு புது வகையான பீர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், கோடை காலத்தையொட்டி தமிழகத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த மே 1-ந்தேதி முதல் தற்போது வரை, டாஸ்மாக் கடைகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பீர் பெட்டிகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு மே மாத விற்பனையை காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி 24 பீர் பிராண்டுகள் விற்பனை நடைபெற்றது. இதில், 3 புது வகையான பீர் பிராண்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. அதில், 100 சதவீதம் கோதுமை பீா் அடங்கும். இது மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், புதிய வகை பீர் பிராண்டுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனையை பொறுத்தவரையில், மே மாதத்தில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 50 ஆயிரம் வரையில் பீர் பெட்டிகள் விற்பனை நடந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 20 லட்சம் வரை பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதைவிட 30 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டு வகை மதுபான விற்பனையும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதேபோல், டாஸ்மாக் வருவாய் மே மாதத்தில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News