தமிழ்நாடு செய்திகள்

கிணத்துக்கடவு அருகே போதை ஊசி-மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

Published On 2023-12-10 14:31 IST   |   Update On 2023-12-10 14:31:00 IST
  • கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
  • போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நெகமம் போலீசார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து வரும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முரளிகுமார்(51), ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்த சுரேஷ்(29), பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல்(46) ஆகியோர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முரளிகுமார், கோவையில் உள்ள மருந்துகடைகளில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதாக கூறி வாங்கி உள்ளார்.

பின்னர் அதனை சுரேஷ் மற்றும் ஜலீல் ஆகியோரிடம் கொடுத்து, நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

முரளி குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் போதை மருந்து மாத்திரைகள், டையாஜீபம் ஊசி 10, தூக்க மாத்திரை 180, சிரிங்ச் 50, என மொத்தம் ரூ.25000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

மேலும் இவர்கள் போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News