தமிழ்நாடு செய்திகள்

கஞ்சா மூட்டைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திய காட்சி

சாத்தான்குளம் அருகே வேனில் பதுக்கி வைக்கப்பட்ட 2,500 கிலோ கஞ்சா பறிமுதல்- போலீசார் விசாரணை

Published On 2023-05-10 11:14 IST   |   Update On 2023-05-10 11:14:00 IST
  • மதுரையில் பிடிபட்ட நபரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

சாத்தான்குளம்:

மதுரை கீரைதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஒருவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீசார் பிடித்தனர். அவரிடம் மதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் வேனில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அவரது தகவலின் பெயரில் மதுரை போலீசார் உடனடியாக வேலவன் புதுக்குளம் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். நேற்று நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது நிறுத்தப்பட்டிருந்த வேனை சோதனை செய்தனர்.

அதில் சுமார் 500 மூட்டைகளில் 2,500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மதுரை போலீசாருடன், சாத்தான்குளம் டி.எஸ்.பி. அருள், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தனர்? இதனை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மதுரையில் பிடிபட்ட நபரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நேற்று திருச்செந்தூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சா பிடிபட்ட நிலையில் இன்று சாத்தான்குளம் 2,500 கிலோ கஞ்சா பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகளின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News