தமிழ்நாடு செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 23 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Published On 2022-12-04 10:30 IST   |   Update On 2022-12-04 10:31:00 IST
  • அமைச்சர் முத்துசாமி ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
  • 23 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் திண்டல் கோவிலில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஈரோடு:

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இன்று 23 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டல் வேலாயுத சுவாமி கோவில் எதிரே உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி கலை அரங்கில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக கலையரங்கம் முன்பு வாழை தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் முத்துசாமி திருமண விழாவிற்கு தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

மணமகன்கள், மணமகள்கள் பட்டு சேலை, வேஷ்டி அணிந்து மாலையுடன் தயாராக இருந்தனர். அமைச்சர் முத்துசாமி ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு 3 கிராம் தங்க திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, சட்டை துண்டு, வெள்ளி மெட்டி, சாமி படம், குத்துவிளக்குகள், பூஜை தட்டு, பூஜை மணி, குங்கும சிமிழ், சந்தன கிண்ணம், இரும்பு கட்டில், போம் மெத்தை, தலையணை, பெட்ஷீட், ஜமுக்காளம், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், பெரிய சில்வர் அண்டா

சில்வர் பால் பாத்திரம், கை கோதி (முடியுறுவி கம்பி), எவர்சில்வர் சாப்பாடு தட்டு, எவர்சில்வர் சிப்பிதட்டு, எவர்சில்வர் பெரிய டம்ளர், எவர் சில்வர் சிறிய டம்ளர், எவர்சில்வர் அன்னக்கூடை, எவர்சில்வர் தாம்பூல தட்டு, எவர்சில்வர் காய்வடி கூடை, சில்வர் பாக்ஸ், எவர்சில்வர் போனி, 21 லிட்டர் பிளாஸ்டிக் பாக்கெட், பிளாஸ்டிக் கோப்பை, மணமக்களுக்கான 16 பொருட்கள் அடங்கிய அழகு சாதன பொருட்கள் பேழை என 34 வகையான சீர் வரிசைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் புதுமண தம்பதிகள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து வேலாயுத சுவாமி திருக்கோவில் மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. 23 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் திண்டல் கோவிலில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர்கள் அன்னக்கொடி, இளையராஜா, சாமிநாதன், ஆணையர், செயல் அலுவலர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு ரமணி காந்தன் ஆய்வாளர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News