தமிழ்நாடு
கொள்ளை நடந்த டாக்டர் வீடு.

டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2022-05-27 04:43 GMT   |   Update On 2022-05-27 04:43 GMT
ஈரோட்டில் குடும்பத்துடன் வெளியூர் சென்ற டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு பெருந்துறை ரோடு டாக்டர் தங்கவேல் வீதியை சேர்ந்தவர் விஷ்ணுதீபக். தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு யோக சந்திரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஷ்ணுதீபக் மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்தினருடன் கடந்த 22-ந்தேதி விருதாச்சலத்திற்கு சென்று விட்டார்.

இதனையடுத்து இன்று அதிகாலை குடும்பத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன.

அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 45 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று வருவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் கைவரிசை காட்டிய தெலுங்கானாவை சேர்ந்த 3 தம்பதிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டலில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை போயிருந்தது. அதேபோல் மூதாட்டியின் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு போயிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இன்று ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. தொடர் திருட்டு சம்பவங்களால் ஈரோடு மாநகர் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News