தமிழ்நாடு
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Published On 2022-05-24 10:11 GMT   |   Update On 2022-05-24 10:48 GMT
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்:

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 41-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டினத்தில் உள்ள சி.பா. ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சி.பா. ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி ரமேஷ், துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், நகர செயலாளர் வாள் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் கல்லூரி முதல்வர்கள் மகேந்திரன், ஜெயந்தி, வைஷ்லின் ஜிஜி, சுவாமிதாஸ், ராம்ராஜ், மரிய சிசிலி, கலைக்குரு செல்வி மற்றும் கல்லூரி அலுவலர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் வியாபாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், இளைஞரணி செயலாளர் கவாஸ்கர் நாடார், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் உருவச்சிலைக்கு ஊர் மக்கள் சார்பில் ஊர் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



Tags:    

Similar News