தமிழ்நாடு
பஸ்கள் நேருக்கு நேர் மோதல்

எடப்பாடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: மாணவ மாணவிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Published On 2022-05-18 06:24 GMT   |   Update On 2022-05-18 06:24 GMT
எடப்பாடி அருகே தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவ மாணவிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
எடப்பாடி:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பேருந்து நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சங்ககிரி வழியாக எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்த பஸ் எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் வந்த போது அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக பயணித்துக் கொண்டிருந்தது.

எடப்பாடி சங்ககிரி பிரதான சாலையில் கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பஸ் சற்றும் வேகத்தை குறைக்காமல் முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென எதிரே வந்த தனியார் பஸ்சும், கல்லூரி பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதனால் 2 பஸ்களும் அப்பளம் போல நொறுங்கி, சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், கல்லூரி பஸ்சில் இருந்த 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பஸ்சில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு பஸ்சில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

தகவலறிந்து எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து விரைந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் அவர்கள் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த தனியார் பஸ் டிரைவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (42), கல்லூரி பஸ் டிரைவர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) மற்றும் இருப்பாளி பகுதியைச் சேர்ந்த சின்ன கண்ணு (60) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனிடையே பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவில் விபத்து நடந்த காட்சி பதிவாகி இருந்தது. அதில், எதிரே வந்த பஸ் திடீரென மின்னல் வேகத்தில் மோதியதும், டிரைவர் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்படுவதும், மேலும் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் நாலாபுறமும் தூக்கி வீசப்படுவதும், அவர்கள் காப்பாற்றுங்கள் என அலறுவதும் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோவை கைப்பற்றி கொங்கணாபுரம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News