தமிழ்நாடு செய்திகள்
கொடிவேரி அணை

கொடிவேரி அணையில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2022-05-12 11:06 IST   |   Update On 2022-05-12 11:06:00 IST
பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.
கோபி:

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.

விடுமுறை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.

இங்கு பொறிக்கப்படும் மீன்களை சாப்பிடுவதற்கு என்றே மக்கள் கூட்டம் தனியாக உள்ளது. காளிங்கராயன் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போது கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிவேரி அணை பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த 9ந் தேதி முதல் மீண்டும் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். வரும் வாரத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தண்ணீர் குறைவாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Similar News