தமிழ்நாடு செய்திகள்
ரோட்டோரம் வீசப்பட்டு கிடந்த காலாவதி மருந்து மாத்திரைகள்

ஈரோடு அருகே ரோட்டோரம் காலாவதி மருந்து, மாத்திரைகள் வீசப்பட்டு கிடந்ததால் பரபரப்பு

Published On 2022-05-11 11:29 IST   |   Update On 2022-05-11 11:29:00 IST
ரோட்டோரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகர் அடுத்த குமரன் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது இல்லை.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் குப்பை கொட்டும் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இன்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது குப்பை கொட்டும் இடத்தில் ஏராளமான மருந்து, மாத்திரைகள் உட்பட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

இவ்வாறு மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவது குற்றமாகும். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் அபராதம் விதித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் அந்த மருத்துவ கழிவுகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Similar News