தமிழ்நாடு செய்திகள்
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு

கோபிசெட்டிபாளையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை திருட்டு

Published On 2022-05-09 10:17 IST   |   Update On 2022-05-09 10:17:00 IST
கோபிசெட்டிபாளையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் மலர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் சூசை மாணிக்கம் (62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி இசபெல்லா ஜான்சிராணி (60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டேவிட்சூசைமாணிக்கம் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த அவர் உடனடியாக இது குறித்து டேவிட் சூசை மாணிக்கத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் சப்இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், விஜயன் தலைமையில் போலீசார் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டுக்கு வந்தனர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

இந்த நேரத்தில் கோவையிலிருந்து டேவிட் சூசை மாணிக்கம் தன் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதேபோல் பணமும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் நெம்பி உள்ளே சென்று உள்ளனர். பின்னர் பீரோவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று உள்ளனர்.

திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

டேவிட்சூசைமாணிக்கம் வீட்டின் முன்பு பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா பொருத்தி உள்ளார். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News