தமிழ்நாடு செய்திகள்
அர்ஜூன் சம்பத்

கோவில் திருவிழாக்களில் இனி விபத்து நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை- அர்ஜூன்சம்பத் வலியுறுத்தல்

Published On 2022-05-02 15:42 IST   |   Update On 2022-05-02 15:42:00 IST
கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அர்ஜூன்சம்பத் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை அருகே களிமேடு தேர் விபத்தில் பலியான குடும்பத்தை சேர்ந்தவர்களை இன்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து விபத்தில் எரிந்த தேரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

களிமேடு தேர் மின்விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பல்வேறு கட்சியினர் நிவாரண நிதி வழங்கியதை வரவேற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

விபத்து தொடர்பாக ஒரு நபர் குழு விசாரணை நடத்தி வருகிறது. கிராம புறங்களில் பல கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்படாத கோவிலாக உள்ளது. அந்த கோவில்களில் திருவிழாக்கள் நடக்கும் நேரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மனிதநேயமிக்கவர்கள் இந்த துயர சம்பவம் குறித்து தங்களது இரங்களை தெரிவித்து உள்ளனர். சினிமா துறையை சேர்ந்தவர்கள் இரங்கள் தெரிவிக்காததை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

இனி இதுபோல் விபத்து நடைபெறாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News