தமிழ்நாடு செய்திகள்
கொள்ளை

சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை பணம் கொள்ளை

Published On 2022-05-01 10:21 IST   |   Update On 2022-05-01 10:21:00 IST
சென்னிமலை அருகே விவசாயியை கொன்று நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூரை சேர்ந்தவர் துரைசாமி(65). இவரது மனைவி ஜெயமணி(62). இருவரும் விவசாயி. இவர்களுக்கு திருமணமான 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகள்கள் சென்னிமலையிலும், மகன் கோவையிலும் வசித்து வருகின்றனர். துரைசாமி, ஜெயமணி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், துரைசாமியும், ஜெயமணியும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு, வெப்பம் காரணமாக வீட்டினை பூட்டி விட்டு, வீட்டிற்கு வெளியே, அதாவது வீட்டின் வாசலில் 2 கட்டில்களில் போட்டு தனித்தனியாக தூங்கியுள்ளனர். இதைநோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் நுழைந்து, தூங்கி கொண்டிருந்த துரைசாமியின் முகத்தில் கூா்மையான ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் உள்ளனா்.

அதைத்தொடர்ந்து ஜெயமணியின் கழுத்தை கத்தியால் அறுத்து, வீட்டினை திறந்து பீரோவை உடைத்து அதில் இருந்த பணத்தையும் பின்னர் ஜெயமணி கழுத்தில் இருந்த தாலி கொடி, துரைசாமி அணிந்திருந்த மோதிரம் என 15 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில், துரைசாமியின் வீட்டில் பால் எடுக்க பால்காரர் இன்று அதிகாலை வந்தபோது, வீட்டின் வாசலில் துரைசாமி கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருப்பதையும், ஜெயமணி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கூச்சல்போட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்தார்.

மேலும், போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகள் துரைசாமியை கடப்பாறை கம்பியால் முகத்தில் தாக்கி, கத்தியால் வெட்டிய காயங்களும் காணப்பட்டது. கடப்பாறையை போலீசார் கைப்பற்றியுள்ளனா்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News