தமிழ்நாடு செய்திகள்
இளம்பெண்

5 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஆட்டோ டிரைவருடன் இளம்பெண் ஓட்டம்

Published On 2022-04-20 15:13 IST   |   Update On 2022-04-20 15:13:00 IST
தனது குழந்தையை கண்டவுடன் மனம் மாறிய இளம்பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம்:

பெங்களூரு பாபுஷா பாளையா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். அவர் 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் அதே பகுதியில் கணவன்-மனைவி வசித்து வந்தனர். தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது.

குழந்தை பிறந்ததும் தனது மனைவிக்கு வாலிபர் செல்போன் வாங்கிக் கொடுத்தார். அந்த செல்போனில் வீடியோ கால் மூலம் வேலைக்கு சென்ற பின் அடிக்கடி தனது குழந்தையை போனில் பார்த்து மகிழ்ந்து வந்துள்ளார்.

குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாபுஷா பாளையா பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். அவருக்கும் இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி 5 மாத பெண் குழந்தையை தவிக்க விட்டு அந்த இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் குடியாத்தம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்தார்.

வீட்டில் உள்ளவர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்துள்ளார். மனைவியை காணாமல் திடுக்கிட்ட வாலிபர் இதுகுறித்து பெங்களூரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் குடியாத்தம் ஆட்டோ டிரைவர் நேற்று குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தான் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டதாகவும் என கூறி மனு அளித்தார்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் பெண்ணின் உறவினர்கள் குறித்து விசாரித்தனர்.

அப்போது பெண்ணுக்கு உறவினர்கள் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால் போலீசாரின் விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணமாகி 5 மாத குழந்தை இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் பெங்களூரு போலீசார் குடியாத்தம் போலீசாரிடம் தொடர்பு கொண்டு இளம்பெண் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா போலீசார் ஆட்டோ டிரைவரையும், இளம்பெண்ணையும் அழைத்து வந்து அறிவுரை கூறினர். 5 நாட்களாக தாயை காணாமல் 5 மாத பிஞ்சுக்குழந்தை கதறி அழுது துடித்துள்ளது. குழந்தைக்காக மனம் இறங்கி வரும்படி போலீசார் அந்த இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறினர்.

அதேபோல் ஆட்டோ டிரைவரிடம் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக எடுத்து கூறினர்.

அப்போது இளம்பெண் ஆட்டோ டிரைவருடன் தான் இருப்பேன் என அடம்பிடித்தார். இந்த நிலையில் அந்த குழந்தையை பெண்ணின் தாய் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். தனது குழந்தையை கண்டவுடன் மனம் மாறிய இளம்பெண் தனது கணவருடன் பெங்களூரு செல்வதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் இளம்பெண்ணுக்கும், அறிவுரை கூறி கணவருடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் ஆட்டோ டிரைவரையும் எச்சரித்து அனுப்பினர்.

Similar News