தமிழ்நாடு செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் 2 டாக்டர்கள் உள்பட 4 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சம் பணம் எடுத்த கும்பல்

Published On 2022-04-16 12:50 IST   |   Update On 2022-04-16 12:50:00 IST
சென்னையில் புதிய பான்கார்டு வழங்க இருப்பதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு ஆன்லைன் மூலம் 4 பேரிடம் ரு.3½ லட்சம் வரையில் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மயிலாப்பூர் ஆதம் தெருவைச் சேர்ந்தவர் கவிதா (வயது 43) கணவருடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார் . இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. உங்கள் பான் கார்டு காலாவதி ஆகிவிட்டது. புதிய பான் கார்டு வழங்க இருப்பதால் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை உண்மை என நம்பிய கவிதா வங்கி கணக்கு விவரங்களை பதிவிட்டார். சிறிது நேரத்திலேயே கவிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 16 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.

இதேபோல் குறுஞ்செய்தி அனுப்பி சென்னை ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனை டாக்டர் ஹேமா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 90 ஆயிரம் ரூபாயும், மற்றொரு டாக்டர் செந்தில் வடிவேலு வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயையும் மர்ம கும்பல் திருடி உள்ளது. இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயப்பேட்டை என்ஜினீயர் விஜய ராகவேந்திரா என்பவரின் செல்போனுக்கும் இதுபோன்ற ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து மர்மநபர் ஒருவர் விஜய ராகவேந்திராவை தொடர்புகொண்டு ஓ.டி.பி. எண்ணை கேட்டுள்ளார். மறுமுனையில் பேசும் நபர் வங்கி ஊழியர் என நினைத்து விஜய ராகவேந்திரா தனது கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்திலேயே ராகவேந்திராவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.96 ஆயிரம் திருடப்பட்டுள்ளது இதுதொடர்பாக ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News