தமிழ்நாடு செய்திகள்
மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர்- போலீசார் விசாரணை
ராஜபாளையத்தில் மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோழபுரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு வேதியியல் ஆசிரியராக பணியாற்றுபவர் தங்கராஜ் (வயது 35).
இவர் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறான பொருள்படும்படியான வாசகத்தை எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.
இதனை அந்த மாணவியின் தங்கை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து ஆகாஷ் என்பவருக்கு அனுப்பி உள்ளார். அவர் வேறு சிலருக்கு அந்த குறுந்தகவலை அனுப்பி உள்ளார். இப்படியாக சமூக வலைதளங்களில் இந்த எஸ்.எம்.எஸ். வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தெரியவந்ததும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் உத்தரவிட்டார். ஆசிரியைகள் ஜாய்ஸ், ஜெகதா ஆகியோர் விசாரணை நடத்தியதில் ஆசிரியர் தங்கராஜ் குறுந்தகவல் அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்ததோடு, வேலையை ராஜினாமா செய்து விட்டும் சென்று விட்டார். இருப்பினும் இதுகுறித்து மேல்நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்பேரில் தலைமை ஆசிரியர் ராமசுப்பிரமணியன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் விசாரணை நடத்தி புனல்வேலியை சேர்ந்த ஆசிரியர் தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.