தமிழ்நாடு செய்திகள்
பாலியல் தொல்லை

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-04-06 12:46 IST   |   Update On 2022-04-06 12:48:00 IST
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட டாக்டர்.ஆனந்தன் அந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக ஆனந்தன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஈரோட்டை சேர்ந்த திருமணமான 30 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி அந்த பெண் ஊழியர் பணியில் இருந்தபோது அங்கு வந்த டாக்டர்.ஆனந்தன் உங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

பின்னர் அந்த பெண் ஊழியர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் டாக்டர் ஆனந்தன் மீது பெண்களை மானபங்கபடுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 30-ந் தேதி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர்.ஆனந்தன் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை கிடைத்தது. அதைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட விசாகா குழுவிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு ஒப்படைத்து உள்ளோம்.

விசாகா குழு அறிக்கை கிடைத்த பிறகு அந்த அறிக்கை கலெக்டரிடமும், துறை இயக்குனரிடமும் சமர்ப்பித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட டாக்டர்.ஆனந்தன் அந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்ட மருத்துவபணிகள் இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கோபி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர்.கலாபிரியா தற்காலிகமாக தலைமை டாக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மறு ஆணை வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News