தமிழ்நாடு செய்திகள்
ஒற்றை யானை

ஆசனூர் அருகே கர்நாடக அரசு பஸ்சை விரட்டிய ஒற்றை யானை

Published On 2022-04-06 11:38 IST   |   Update On 2022-04-06 11:38:00 IST
வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி சாலையை கடந்து சென்று வருகிறது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, குரங்குகள், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இந்த வனப்பகுதி வழியாக கர்நாடக மாநிலத்துக்கும் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி சாலையை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை வன விலங்குகள் விரட்டும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தண்ணீர் குடிக்க செல்வது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு ஒரு கர்நாடக அரசு பஸ் ஆசனூர் வழியாக நேற்று மாலை சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆசனூர் வனச் சாலையில் ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது.

அந்த ஒற்றை யானை திடீரென கர்நாடக பஸ்சை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ்சை வேகமாக ஓட்டினார். இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அச்சம் அடைந்து அலறினர். தொடர்ந்து பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டி யானையை கடந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, யானைகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ரோட்டுக்கு வருகிறது. எனவே வனப் பகுதிக்குள் தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்கலாம் என கூறினர்.

Similar News