தமிழ்நாடு
வண்டலூர் பூங்கா

வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க வண்டலூர் பூங்காவில் விலங்குகளுக்கு ‘‌ஷவர்’ குளியல் ஏற்பாடு

Published On 2022-04-04 08:18 GMT   |   Update On 2022-04-04 08:18 GMT
வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை குளிரூட்டும் விதமாக சிறியகுழாய்கள் பாதையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்து தண்ணீர் சாரல் போல் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வண்டலூர்:

வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் என சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனை கண்டு ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் அதனை சமாளிக்க விலங்குகள், பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு குரங்குகள், மயில்கள் உள்பட பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களில் சவுக்கு கம்புகள் வைத்து அவை மகிழச்சியுடன் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. கிளிகளுக்கு ஏணிப்படிகளும் அமைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மனித குரங்கு வசிக்கும் பகுதியில் திறந்தவெளி தண்ணீர் குளியல் தொட்டி கட்டப்பட்டு உள்ளது. மேலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க குழாய்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சூட்டைத் தணிக்க கூடிய பழங்கள், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் அனைத்தும் சேர்க்கப்பட்டு குளிர்பானம் முறையில் கொடுக்கப்படுகிறது. தண்ணீர் தொட்டியில் மனித குரங்கு உல்லாச குளியல் போடுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கிறார்கள்.

பறவைகளுக்கு அதன் இருப்பிடங்களை சுற்றி சணல் கோணிப்பைகள் சுற்றி கட்டப்பட்டு ‌ஷவர் குளியல் வைக்கப்பட்டு உள்ளன. கோடை வெயிலின் தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க ஊழியர்கள் அவ்வப்போது கவனித்து வருகின்றனர்.

சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி, யானைகளுக்கு ‌ஷவர் குளியல் மற்றும் சேற்று குளியலும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளுக்கு மதியம் 11 மணி, 12 மணி என ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வனவிலங்குள், பறவைகளுக்கு கோடை வெயிலின் தாக்கம் இல்லாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் விலங்குள் தங்களுக்கான ‌ஷவரில் சூட்டை தணிக்க அவ்வப்போது உல்லாச குளியல் போட்டு வருகிறது.

இதேபோல் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களை குளிரூட்டும் விதமாக சிறியகுழாய்கள் பாதையின் மேல்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்து தண்ணீர் சாரல் போல் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பூங்கா வளாகத்தில் ஆங்காங்கே செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News