தமிழ்நாடு செய்திகள்
கொரோனா வைரஸ்

2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு

Published On 2022-03-16 10:25 IST   |   Update On 2022-03-16 10:25:00 IST
கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கொரோனா ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி தாய்லாந்தில் இருந்து வந்திருந்த இருவருக்கு முதல் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக பதிவாகி கொண்டே இருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. 2-ம் அலையின்போது தினசரி பாதிப்பாக ஒரே நாளில் 1,800 பேர் வரை பதிவாகியிருந்தது.

அதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டதால் பாதிப்பு குறைய தொடங்கியது. எனினும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உடையவர்கள் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவி மாவட்டத்தில் 3-ம் அலை ஏற்பட்டது.

தினசரி பாதிப்பு அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. 3-ம் அலையில் தினசரி பாதிப்பு 1,400 வரை பதிவாகியிருந்தது. பின்னர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 2 வாரமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்றானது. தற்போது மாவட்டம் முழுவதும் தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி தினசரி பாதிப்பு 0 ஆக பதிவாகியிருந்தது. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 660 ஆக பதிவாகியுள்ளது.

5 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 906 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை 734 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


Similar News