தமிழ்நாடு செய்திகள்
ஆம்பூர் அருகே குழந்தைகள், கணவன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
ஆம்பூர் அருகே குழந்தைகள், கணவன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகன் ஜஸ்வந்த் (வயது8). மகள் ஹரிபிரிதா (6). கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
கடந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊத்தங்கரையில் இருந்து குடும்பத்தோடு கடாம்பூர் கிராமத்திற்கு வந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி காலை லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றார். அங்குள்ள மலையில் குழந்தைகளுடன் லோகேஸ்வரன் செல்போனில் போட்டோ எடுத்தார்.
தந்தையுடன் இருந்த குழந்தைகள் ஆர்ப்பரிப்புடன் மலை பகுதியில் நின்று போட்டோ எடுக்குமாறு கூறினர். குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு கோணங்களில் அவர்களை படம்பிடித்தார்.
பின்னர் அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். அந்த நேரத்தில் குழந்தைகள் ஜஸ்வந்த், ஹரிப்ரியா இருவரும் தவறி குளத்தில் விழுந்தனர்.
நீச்சல் தெரியாததால் குளத்தில் இருவரும் தத்தளித்தனர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
குழந்தைகள் பலியான சோகத்தில் துக்கம் தாங்காமல் அன்று இரவு லோகேஸ்வரனும், மீனாட்சியும் அழுது துடித்தனர்.
குழந்தைகள் இல்லாமல் உயிர் வாழ மனம் இல்லாததால் லோகேஸ்வரன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். மறுநாள் வாணியம்பாடிக்கு சென்று பூச்சி மருந்து வாங்கி வந்தார்.
பின்னர் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு வைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து லோகேஸ்வரன் குடித்தார். இதனை கண்ட மீனாட்சியும் அந்த விஷத்தை குடிக்க முயன்றார். ஆனால் லோகேஸ்வரன் அதனை தட்டி விட்டார்.
என்னையும், குழந்தைகளையும் அடக்கம் செய்து விட்டு அதற்குப் பிறகு நீ ஏதாவது செய்து கொள் எனக் கூறினார். இதனால் பதறிப்போன மீனாட்சி அலறி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் லோகேஸ்வரனை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
கணவர், குழந்தைகளை இழந்த வேதனையுடன் கடந்த 6 மாதமாக மீனாட்சி வாழ்ந்து வந்தார். கணவன், குழந்தைகள் இல்லாமல் வெறுமனே வாழ்ந்து வந்த வாழ்க்கை அவரை வாட்டியது. இதனால் மன உளைச்சலில் இருந்த மீனாட்சி நேற்று மதியம் கடாம்பூரில் தன் தாய் சுமதி வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உமராபாத் போலீசார் பிணத்தை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைகள் கணவனும் இறந்த துக்கத்தில் அடுத்த 6 மாதத்தில் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.