தமிழ்நாடு செய்திகள்
இந்திய மாணவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்- உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர் பேட்டி
கல்லூரியின் அருகே ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாக அங்குள்ள என்னுடன் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் விசுவா. இவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்குவதற்கு முன்பாக கடந்த 18-ந்தேதி இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்தது.
அதன்பேரில் விஷ்வா உள்ளிட்ட சில மாணவர்கள் வந்துள்ளனர். மாணவர் விஸ்வாவுடன் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 9 பேரில் 6பேர் புறப்பட்டு வந்தனர்.கடந்த 18-ந்தேதி ஏர் அரேபியா விமானம் மூலம் சார்ஜா வந்து, பின்னர் அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் சென்னை வந்திருக்கின்றனர்.
இதுகுறித்து மாணவர் விஸ்வா கூறியதாவது:-
பொதுவாக இந்தியாவிற்கு வந்து திரும்ப விமான கட்டணம் 42 ஆயிரம் ரூபாய். ஆனால் போர் மேகம் சூழ்ந்து இருந்ததால் உக்ரைனில் இருந்து இங்கு வர விமானத்தில் வருவதற்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டார்கள். நாங்கள் என்னுடன் படிக்கும் வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் கூடுதல் பணம் கொடுத்து இங்கே வந்து விட்டோம்.
நல்லவேளையாக நான் அங்கு வந்து சேர்ந்து விட்டேன். என்னுடன் படித்த மாணவர்கள் அங்கு பலர் இருக்கிறார்கள். எங்கள் கல்லூரியில் ஏராளமான இந்திய மாணவர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர்.ரஷ்யா கீவ்வில் தாக்குதல் நடத்துவதால் எங்கள் கல்லூரியும் அங்கு இருப்பதால் எனக்கு மிகுந்த அச்சமாகவும் எங்கள் மாணவர்களின் நினைத்து கவலையாக உள்ளது.
மேலும் எங்கள் கல்லூரியின் அருகே ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாக அங்குள்ள என்னுடன் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் சாலைகளில் பீரங்கிகளுடன் வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன என்றும் அவர்கள் கூறினர். இதனால் பதற்றத்துடன் உள்ள இந்திய மாணவர்களை இங்கு அழைத்து வரஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர் விஸ்வா தெரிவித்தார்.