தமிழ்நாடு செய்திகள்
ரவுடி படப்பை குணா

பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

Published On 2022-02-17 12:36 IST   |   Update On 2022-02-17 12:36:00 IST
தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம்:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுர மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன்.

இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 48 வழக்குகள் உள்ளன.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் படப்பை குணா மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது.

இதன் பின்னர் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். என்கவுண்டருக்கு பயந்து இருந்த படப்பை குணாவின் மனைவி தனது கணவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

அப்போது போலீசார் தரப்பில் என்கவுண்டர் திட்டம் எதுவும் இல்லை. சரண் அடைந்தால் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்று தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையே கடந்த மாதம் 25-ந் தேதி ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென சரண் அடைந்தார். பின்னர் அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே அவர் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பேன் என்று எழுதிக்கொடுத்ததில் இருந்து மீறியதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரின் பரிந்துரையின் பெயரில் கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News