தமிழ்நாடு செய்திகள்
ஜெயிலில் பலியான வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

ஜெயிலில் பலியான வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் - போலீஸ் குவிப்பு

Published On 2022-02-16 16:30 IST   |   Update On 2022-02-16 16:30:00 IST
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பலியான வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.மேலும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நேற்று முன்தினம் ராஜாமணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

வேலூர் ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார்.

அவரது உடல் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ராஜாமணியின் உறவினர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். ராஜாமணியின் சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் உடலை வாங்க மறுத்தனர்.இன்று காலை 30-க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு வேலூர்- ஆரணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர் களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராஜாமணியின் சாவில் மர்மம் உள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும். அவரது குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் சென்றனர். போக்குவரத்து சீரானது. தொடர்ந்து ராஜாமணியின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆஸ்பத்திரி வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News