தமிழ்நாடு
ஜோதி மணி

நீட் தேர்வு குறித்து கார்த்தி சிதம்பரம் தெரிவித்தது கட்சியின் கருத்து அல்ல- ஜோதிமணி எம்.பி. பேச்சு

Published On 2022-02-07 10:34 GMT   |   Update On 2022-02-07 10:34 GMT
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என்று ஜோதிமணி எம்.பி. கூறினார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத்துக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பின்பு ஜோதிமணி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நீட் தேர்வு குறித்து கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. அது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உறுதியாக தெரிவித்து விட்டார்.

தமிழகத்துக்கு ஏன் நீட்தேர்வு தேவையில்லை என்பதற்கு பல்வேறு காரணங்களை தமிழக அரசு எடுத்துரைத்துள்ளது. ஆனால் இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பிய நிலையில் 6 மாதங்கள் கழித்து அதனை திருப்பி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அதற்கான ஒரு காரணத்தை கூட ஆளுனர் குறிப்பிடவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் 8 கோடி பேரையும் ஆளுனர் புறக்கணித்துள்ளார்.

தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வு என்பது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. தமிழக மக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசோடு சேர்ந்து ஆளுனரும் துரோகம் செய்துள்ளார். அதற்கு அ.தி.மு.க.வும் துணைபோகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் மத்திய அரசின் மீதான எதிர்ப்பை அ.தி.மு.க. தவிர்த்து வருகிறது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News