தமிழ்நாடு
ஊட்டியில் புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருக்கும் காட்சி.

குன்னூரில் கடும் நீர்பனி- குளிர் பொதுமக்கள் அவதி

Published On 2022-01-24 09:13 GMT   |   Update On 2022-01-24 09:13 GMT
குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை உறைபனி கொட்ட தொடங்கவில்லை. உறைபனியும் கொட்ட தொடங்கினால் இன்னும் குளிர் அதிகமாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் 2 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்பு மழை குறைந்து, வெயிலும், குளிரும் மாறி அடித்து வருகிறது.

தற்போது கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுப்பட்டரை, வண்டிச்சோலை, குன்னூர் பஜார் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இரவு, பகல் என எந்நேரமும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. மாலை 3 மணிக்கெல்லாம் குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. குளிருடன் நீர் பனியும் சேர்ந்து கொட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர தயங்கும் நிலை காணப்படுகிறது. குளிருக்கு பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.

காலை நேரத்தில் கொட்டும் நீர்பனி மற்றும் குளிரால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலையில் தொப்பி, பனியன் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் பணியில் ஈடுபடுகின்றனர். சிலர் தோட்டங்களில் வேலை பார்க்கும் இடத்தின் அருகே விறகுகளை எரித்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டே பணியில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது.

ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர், குல்லா போன்றவற்றை அணிந்திருக்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட அதிகமாக குளிர் மற்றும் நீர்பனி நிலவுவதால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.

இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதிகளவிலான பெரியவர்கள் தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதையும் பார்க்க முடிகிறது.

இதுவரை குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனி கொட்ட தொடங்கவில்லை. உறைபனியும் கொட்ட தொடங்கினால் இன்னும் குளிர் அதிகமாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி குன்னூரில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News