தமிழ்நாடு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

மழை பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-22 10:49 GMT   |   Update On 2022-01-22 10:49 GMT
டெல்டா மாவட்டங்களில் இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், ஜெயபால் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பெய்தது.

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல லட்சம் ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரியும், இழப்பீடு வழங்காத தி.மு.க. அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைமை அறிவித்தது.

அதன்படி இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மழையால் நெற்பயிர்களை இழந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

தஞ்சை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் தலைமையில் ஏராளமானோர் திரண்டு கோ‌ஷமிட்டனர். இதேப்போல் திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவிடைமருதூர் போன்ற இடங்களில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 700 பேர் கலந்து கொண்டனர். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதேப்போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை தாலுகா அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர்கள் ஜீவானந்தம், ஜெயபால் ஆகியோர் தலைமையில் கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இழப்பீடு வழங்குவதை தாமதப்படுத்தினால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய தாலுகா அலுவலகங்கள் முன்பு பயிர் இழப்பீடு வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் இன்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், ஜெயபால் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் அந்தந்த பகுதி தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் என 20 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு 2000-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News