தமிழ்நாடு செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் கடற்படை, பேரிடர் மீட்பு படை வீரர்கள், போலீசார் 45 பேருக்கு கொரோனா

Published On 2022-01-06 10:17 IST   |   Update On 2022-01-06 10:17:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அரக்கோணம்:

அரக்கோணம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் முதலில் கொரோனா உறுதியானது. அதன் பிறகுதான் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த சிறுவன் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் அவன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

அரக்கோணத்தில் உள்ள கடற்படை, தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அரக்கோணம் பகுதியை சேர்ந்த போலீசார் என 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒமைக்ரான் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்கள் மற்றும் குடும்பத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளவேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். கிருமி நாசினிகளை கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News