தமிழ்நாடு செய்திகள்
சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை

ஊழல் வழக்கில் சிக்கிய பேரூராட்சி உதவி பொறியாளர் உள்பட 5 பேரையும் சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை

Published On 2021-12-24 12:19 IST   |   Update On 2021-12-24 12:19:00 IST
லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி உதவி பொறியாளர் நாகராஜன் உள்பட 5 பேரும் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு கலெக்டர் அலுவலகம் 7 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு கலெக்டர் அலுவலகத்துடன் பல்வேறு அரசு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 -வது மாடியில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது.

இங்கு உதவி செயற்பொறியாளராக நாகராஜன் (59) என்பவர் பணியாற்றி வந்தார்.இளநிலை பொறியாளராக லீலாவதி பணியாற்றி வந்தார். இந்த அலுவலகம் திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்டதாகும். ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் 15 பேரூராட்சிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட 52 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள பணிகளுக்காக நேற்று முன்தினம் டெண்டர் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் இடமிருந்து லஞ்சப் பணம் வசூல் நடப்பதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் போலீசார் அதிரடியாக அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.51 லட்சத்து 32 ஆயிரம் பணம் சிக்கியது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் லீலாவதி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் செல்லமுத்து, திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி எலக்ட்ரீசியன் செல்வம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த தற்காலிகப்பணியாளர் வெங்கடேஷ் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வீடு கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி உதவி பொறியாளர் நாகராஜன் உள்பட 5 பேரும் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் நாளைக்குள் துறை ரீதியாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News