தமிழ்நாடு
திற்பரப்பு அருவியில் குளித்த மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

8 மாதங்களுக்கு பிறகு அனுமதி- திற்பரப்பு அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Published On 2021-12-17 07:25 GMT   |   Update On 2021-12-17 07:25 GMT
திற்பரப்பு அருவியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியில் குளிப்பதற்கு குறைவான அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
நாகர்கோவில்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.

தற்போது கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி கடற்கரை மற்றும் மாத்தூர் தொட்டில்பாலம் வட்டக்கோட்டை பீச் பத்மநாபபுரம் அரண்மனை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கூட்டம் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அலைமோதி வருகிறது . ஆனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார். 8 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அருவி பகுதியில் இருந்த பாசிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திற்பரப்பு அருவியில் இன்று காலை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. ஆனால் அருவியில் குளிப்பதற்கு குறைவான அளவு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்த நிலையில் முதல் நாளான இன்று கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் சனிக்கிழமையான நாளை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிக அளவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குமரி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.



Tags:    

Similar News