தமிழ்நாடு
கமாண்டோ சிறப்பு குழு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து- நவீன கருவிகளுடன் ஆய்வு செய்த கமாண்டோ குழு

Published On 2021-12-09 16:53 GMT   |   Update On 2021-12-09 16:53 GMT
பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி  பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த விபத்து குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. முப்படை சார்பாக நடைபெறும் விசாரணைக்கு ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஹெலிகாப்டரில் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு ஏற்படுவது என்பது மிகவும் குறைவு என சொல்லப்படுகிறது. மேலும் பனி மூட்டத்திலும் எளிதாக கடந்து செல்லக்கூடிய ஹெலிகாப்டர் என்பதால் இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது ஏதாவது சதியா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், நாட்டின் பாதுகாப்புக்காக சில வேலைகளை கையில் எடுத்திருந்ததாகவும், அதனால் இது வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அந்த கோணத்திலும் ராணுவ அதிகாரிகளின் விசாரணை நடந்து வருகிறது. கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் உள்ள விவரங்களை கொண்டு விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் கமாண்டோ சிறப்புக் குழுவினர் 20 பேர் நவீன கருவிகளுடன் விபத்து நடந்த இடத்திற்கு இன்று வருகை தந்தனர். அவர்கள் காட்டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் இருந்து நடைபாதை வழியாக நவீன கருவிகளை 2 பெரிய பெட்டிகளில் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலும் நவீன டிரோன் கேமராக்களும் கொண்டு வரப்பட்டன. 

இதன் மூலம் முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் எவ்வளவு உயரத்தில் பறந்தபோது விபத்து ஏற்பட்டது? மரங்களின் மீது மோதுவதற்கு முன்பு எவ்வளவு உயரத்தில் பறந்தது? ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைய இன்னும் எவ்வளவு தூரம் இருந்தது போன்றவற்றை டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டு நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டது. இதற்காக விபத்து நடந்த பகுதி, தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதி, வனப்பகுதிகள் மேல் கேமராவை பறக்கவிட்டனர். மரங்களின் உயரம் மற்றும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவீன கருவிகள் மூலம் ஆய்வு பணி நடந்ததால் அப்பகுதியில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News