தமிழ்நாடு
முருங்கைக்காய்

ஈரோடு பெரிய மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.280-க்கு விற்பனை

Published On 2021-12-09 05:35 GMT   |   Update On 2021-12-09 05:35 GMT
கடந்த சில நாட்களாக கனமழை எதிரொலியாக வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. குறிப்பாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மிகவும் குறைந்து உள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 முதல் 20 வரை விற்பனையானது. கனமழை காரணமாக வரத்து அடியோடு குறைந்ததால் மின்னல் வேகத்தில் தக்காளி விலை எகிறி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகம் ஆனதால் மீண்டும் தக்காளி விலை ரூ.60 முதல் 80 வரை விற்பனையானது.

இதேப்போல் மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது. ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி பெரிய மார்க்கெட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவு வரத்தாகி வந்தது.

கடந்த சில நாட்களாக கனமழை எதிரொலியாக வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. குறிப்பாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. இதன் எதிரொலியாக முருங்கைக்காய் விலை கிலோவுக்கு விண்ணைத் தொடும் அளவுக்கு விலை எகிறியது.

கடந்த வாரம் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது. பின்னர் மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனையானது. முருங்கைக்காய் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடுவ.உ.சி.நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தினமும் 100 மூட்டை முருங்கக்காய்  வந்த நிலையில் தற்போது தினமும் வெறும் 6 முட்டைகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக முருங்கைக்காய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News