தமிழ்நாடு
எரியும் ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ அதிகாரிகள் அபயக்குரல் எழுப்பினர்

எரியும் ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ அதிகாரிகள் அபயக்குரல் எழுப்பினர் - நேரில் பார்த்த கிராம மக்கள் உருக்கம்

Published On 2021-12-09 05:14 GMT   |   Update On 2021-12-09 05:14 GMT
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தினை நேரில் பார்த்தவர்கள் அளித்த பேட்டிகள் அனைத்தும் அதிர்ச்சியளிக்கும் வகையிலேயே உள்ளது.

பெருமாள்சாமி (குன்னூர் நஞ்சப்ப சத்திரம்:-

நான் எனது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது வானத்தில் ஏதோ ஒரு பெரிய அளவிலான சத்தம் கேட்டது. என்னவென்று பார்த்த போது ஹெலிகாப்டர் ஒன்று எரிந்தபடியே கீழே வந்த வண்ணம் இருந்தது.

அப்போது அதில் இருந்து 2 பேர் உடல் முழுவதும் தீ எரிந்த நிலையிலேயே கரிகட்டையாகி கீழே விழுந்தனர். வேகமாக வந்த ஹெலிகாப்டர் மரங்களில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

இந்த நிலையில் கீழே விழுந்த ஹெலிகாப்டரில் இருந்து 2 பேர் அபய குரல் எழுப்பினர். அவர்கள் இந்தியில் பேசியதால் எங்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்கள் தங்களை யாராவது காப்பாற்றுங்கள் என்று தான் அழைப்பார்கள் என நினைத்து கொண்டு நானும், இன்னும் சிலரும் சத்தம் வந்த இடம் நோக்கி ஓடினோம்.

அங்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க எவ்வளவோ முயற்சி மேற்கொண்டோம். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் எங்களால் அதன் அருகே நெருங்க முடியவில்லை. உடனடியாக அனைவருமே வீடுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அணைக்க முயன்றோம். ஆனாலும் தீ பற்றி எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தோம். வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது தான் இது நடந்தது என்று நாங்கள் நினைத்திருந்தோம்.

ஆனால் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், ராணுவ மற்றும் விமான படையினர் வந்த பின்னர் தான் இந்த விபத்தில் இந்திய நாட்டின் தளபதியே சிக்கி உயிரிழந்த தகவல் எங்களுக்கு தெரிந்தது. இது மிகவும் வேதனையளிக்கிறது. காப்பாற்றுங்கள் என்று அழைத்தவர்களை கூட எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், நாங்கள் சிலர் சாலையோரம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தோம். அப்போது டமார், டமார் என சத்தம் கேட்டது. யாராவது வெடி வெடிக்கிறார்களோ என்று தான் நினைத்தோம். ஆனால் சற்று தொலைவில் பார்த்தபோது அந்த பகுதியே கரும்புகை மண்டலமாகவும், தீயும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அங்கு ஒடி சென்று எங்கள் பகுதியை சேர்ந்த அனைவருமே தீயை அணைப்பதில் மும்முரமாக ஈடுபட்டோம். ஆனாலும் எவ்வளவோ முயன்றும் 13 பேர் உயிரிழந்து விட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News