தமிழ்நாடு
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,507 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-12-02 05:20 GMT   |   Update On 2021-12-02 05:20 GMT
பவானி ஆற்றில் 7,700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி 105 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியில் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 2 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

நேற்று இரவும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 507 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, பவானி ஆற்றுக்கு 7,700 கனஅடி என மொத்தம் 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக பவானி ஆற்றில் 7,700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் பவானி ஆற்றில் குளிக்க, துணி துவைக்க கூடாது என்றும், மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் கரையோர பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



Tags:    

Similar News