தமிழ்நாடு
ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் கிராம மக்களை காணலாம்

கொடைக்கானல் அருகே வெள்ளப்பெருக்கு- ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் கிராம மக்கள்

Published On 2021-12-01 08:42 GMT   |   Update On 2021-12-01 08:42 GMT
பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதி விவசாயிகள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து ஆற்றை கடந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் நகர் மற்றும் மலைக்கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே கனமழை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. அதனைத்தொடர்ந்து இரவு வரை மிதமான மழையாக தொடர்ந்து பெய்து வந்தது. கொடைக்கானல் பேத்துப்பாறை வயல் பெரியாற்றின் மேற்குக் கரைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர்.

பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் கயிற்றை பிடித்து ஆற்றை கடந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விளையக்கூடிய விளைபொருட்களை தலைச்சுமையாக சுமந்தவாறு இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப்பொருட்கள் வாங்க வெளியே வராமல் இந்த கிராமத்திலேயே முடங்கியுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள பெரியாற்றினை மழை காலங்களிலும் எளிதாக கடந்து செல்ல பாலம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எப்போது மழை பெய்தாலும் கயிறைக் கட்டி ஆற்றைக் கடப்பது இப்பகுதி மக்களின் தீராத துயரமாக உள்ளது.


Tags:    

Similar News